காரின் நிழல் கோட்டைத் தாண்டியதற்காக அபராதமா?….

மாற்றுத்திறனாளிகளின் வாகன நிறுத்த இடத்தில் காரின் நிழல் விழுந்த குற்றத்திற்காக ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்த வினோத சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
‘காரில் செல்லும்போது ஏன் ஹெல்மெட் போடவில்லை.. இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது சீட் பெல்ட் அணியவில்லை..’ என வித்தியாசமான காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சம்பவங்களை அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் தான் இப்படி பொறுப்பான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றால், வெளிநாடுகளில் இதைவிட சின்சியர் ஆபிசர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக இங்கிலாந்தில் நடந்த சம்பவம் ஒன்று ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. காரின் நிழல் அனுமதிக்கப்படாத இடத்தில் விழுந்தததற்காக ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளனர் இங்கிலாந்து போலீசார்.

லண்டனைச் சேர்ந்த கார்டனர் மேத்யூ கோல். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளின் பள்ளிக்குச் சென்றுள்ளார். மகளின் கால்பந்து விளையாட்டைக் காணச் சென்ற இவர், காரை பள்ளிக்கு வெளியே முறைப்படி வாகன நிறுத்தத்தில் நிறுத்திச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், அவருக்கு போலீசார் ஒரு அபராத நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில், மேத்யூவின் கார் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்த ஒதுக்கப்பட்டதாகக் கூறி, சாட்சிக்கு ஒரு புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி இருந்தனர். இந்த நோட்டீஸைப் பார்த்து மேத்யூ அதிர்ச்சி அடைந்தார்.

எனவே இது குறித்து போலீசாரிடம் விளக்கம் கேட்டு அவர் மெயில் ஒன்றை அனுப்பினார். ஆனால் போலீசார் தாங்கள் அனுப்பி அபராதம் சரியானதுதான் என அதற்கு பதில் அனுப்பியுள்ளனர். கூடவே, குறிப்பிட்ட தேதிக்குள் இந்த அபராதத் தொகையைக் கட்டவில்லையென்றால், அபராதம் £130 அதாவது இந்திய மதிப்பில் ரூ13000 ஆக உயர்த்தப்படும் எனவும் அந்த விளக்கத்தில் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எப்படியும் தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூறியே ஆவது என போலீசாரின் இந்த மெயிலுக்கும் பதில் அனுப்பியுள்ளார் மேத்யூ. அதில், ‘ஒவ்வொரு முறை தனது மகளின் பள்ளிக்கு செல்லும் போதும், குறிப்பிட்ட அதே இடத்தில் தனது காரை நிறுத்தி செல்வதாகவும், தற்போது தான் அபராதம் வந்திருக்கிறது. முன்பு வரவில்லை’ எனவும் அந்தமெயிலில் மேத்யூ குறிப்பிட்டுள்ளார். இந்த மெயிலுக்கு இதுவரை பதில் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.

இதற்கிடையே இந்த சம்பவத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் மேத்யூ பதிவிட, வழக்கம்போலவே அது விவாதப் பொருளாகி விட்டது. சூரியனின் நிலையைப் பொறுத்து பகல் நேரத்தில் நிழலின் அளவு இருக்கும். அப்படி இருக்கையில் காரின் நிழல் எல்லை மீறி விழுந்ததாக அபராதம் விதிப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என மேத்யூவிற்கு ஆதரவாகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.