கேரள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு சென்னை தப்பி வந்தவர் கைது

கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து விட்டு, சென்னைக்கு ரயிலில் தப்பியோடிய நபர் குறித்து சென்னை ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கேரள போலீஸார் தகவல் கொடுத்தனர்.

அதுமட்டுமல்லாமல், எர்ணாகுளம் ரயில் நிலையத்துக்கு வந்த சிசிடிவி காட்சியையும் அவர்கள் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், எர்ணாக்குளத்தில் இருந்து சென்னை வந்த வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் சோதனை செய்தனர். பெரம்பூர் – சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடையே அந்த ரயில் வந்த போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, கேரள போலீஸார் கொடுத்த தகவலின் படி, அதே நபர் ரயிலில் பயணம் செய்ததை ரயில்வே போலீஸார் உறுதி செய்தனர்.

அப்போது அவரது பிஸ்வாத்ஜி சர்கார் என்பது தெரியவந்தது. மேலும், கேரளாவில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு அங்கிருந்து தப்பி வந்ததையும் அவர் ஒப்பு கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், அவரை கேரள போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.